திருச்சி:காவிரியில் நீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து, முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டது. கர்நாடக அணைகள் நிரம்பியதை அடுத்து உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 4ம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன்பிறகும் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது.
எனவே, திருச்சி பகுதியில் காவிரியில் வெள்ள சேதம் ஏற்படாமல் தடுக்க கடந்த 5ம் தேதி காலை 11.15 மணிக்கு முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. 6ம் தேதி கொள்ளிடத்தில் வினாடிக்கு 83 ஆயிரம் கன அடி வீதமும், 7ம் தேதி 1 லட்சத்து 14 ஆயிரத்து 420 கன அடி வீதமும், 8ம் தேதி 19 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் காவிரியில் நீர் வரத்து குறைந்து வெள்ள அபாயம் நீங்கியதை அடுத்து நேற்று இரவு முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. கல்லணையில் இருந்து மட்டும் கொள்ளிடத்தில் வினாடிக்கு 4,893 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் நீர்மட்டம் 120.260 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 22,442 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 25,413 கன அடி திறக்கப்படுகிறது. அணையில் 93.886 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
கல்லணையில் இருந்து காவிரியில் 9512 கன அடியும், வெண்ணாற்றில் 7001 கன அடியும் திறக்கப்படுகிறது. கல்லணை கால்வாயில் திருக்காட்டுப்பள்ளி அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதை சீரமைக்கும் பணி நடக்கிறது. எனவே கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை.