குழந்தை திருமணத்தை தடுக்க மண்டபம் புக் செய்யும் போது மணமக்கள் வயசை விசாரியுங்கள் கலெக்டர் பேச்சு
திண்டுக்கல்:திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், மணமக்களின் வயதை திருமண மண்டப நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.திண்டுக்கல்லில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சைல்டு லைன் சார்பில் ஆலோசனை குழுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்து பேசியதாவது:
குழந்தைகள் கடத்தல், குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரச்னைகளை தடுத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து, சுதந்திர தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் ஆண்களின் திருமண வயது 21, பெண்களின் திருமண வயது 18 என பொதுமக்கள் பார்வையில் படும்படி எழுதி வைக்க வேண்டும்.
மண்டபம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் திருமண மண்டப நிர்வாகிகள், மணமக்களின் வயதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு கருதி புகார் பெட்டி வைக்க வேண்டும். புகார்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி துறை அலுவலகம் ஆய்வு செய்ய வேண்டும். ஊராட்சி நிதியில் இருந்து புகார் பெட்டி வாங்க நிதி ஒதுக்கலாம். குழந்தைகளுக்கான பிரச்னைகளை ‘1098‘ என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.