இந்தியாவில் 50 ஆண்டில் 220 மொழிகள் அழிவு
மும்பை: இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் மொழி ஆய்வு மற்றும் பதிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் இந்தியா முழுவதும் உள்ள மொழிகள் குறித்து ஆய்வு நடத்தியது. எழுத்தாளர் கணேஷ் தேவி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் மொழி குறித்த ஆய்வு என்ற பெயரில் இது நடத்தப்பட்டது. 2011ம் ஆண்டு தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
ஆய்வு முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளரும், திட்ட தலைவருமான கணேஷ் தேவி கூறுகையில், இந்தியா முழுவதும் எங்கள் ஆய்வு மூலமாக 780 மொழிகளை கண்டுபிடித்தோம். அவற்றில் 100க்கும் மேற்பட்டவை அழியும் நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அழிந்து போன மொழிகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் மொழிகள் குறித்த எங்கள் ஆய்வில் கிட்டத்தட்ட 880 மொழிகள் இந்தியா முழுவதும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அவற்றில் பல மொழிகள் மறைந்துவிட்டன. 1961ம் ஆண்டு 1,652 மொழிகள் இருந்ததாக பதிவாகி உள்ளது. பின்னர் அது 1,100 ஆக குறைந்துள்ளது. 1971 கணக்கெடுப்பின் போது 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் மொழிகள் 108 இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துள்ளன என்றார்.