த்ரில்லருக்கு மாறும் காமெடி டிரெண்ட்
சென்னை: காமெடி கதைகள் பாணி தற்போது த்ரில்லர் பாணிக்கு மாறுகிறது. ‘கலகலப்பு', ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா', ‘தில்லுமுல்லு', சமீபத்தில் வெளியான ‘பட்டத்து யானை' படம் வரை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகள் அமைக்கப்பட்டன. தற்போது அந்த பாணி, த்ரில்லருக்கு மாறி வருகிறது. ஏற்கனவே வெளியான ‘பீட்சா' த்ரில்லர் படத்தின் 2ம் பாகமாக ‘வில்லா' என்ற பெயரில் ‘பீட்சா 2' உருவாகி வருகிறது.
அந்த வரிசையில் ‘அத்தியாயம்' என்ற படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் ஆர்.யுவன் கூறியதாவது:
ஹீரோயின் வர்ஷா கே.பாண்டி நாவல் ஒன்றை படிக்கிறார். அதில் மொத்தம் 10 அத்தியாயம் இருக்கிறது. அதில் வரும் திடுக்கிடும் சம்பவங்கள் அனைத்தும் ஹீரோயின் வாழ்க்கையில் நிஜமாக நடக்கிறது. அந்த சம்பவத்தில் ஹீரோ சரண் நுழைகிறார். அதன்பிறகு கதையின் போக்கு மேலும் த்ரில்லாக மாறுகிறது. இதன் ஷூட்டிங் ஐதராபாத், சென்னையில் நடந்துள்ளது. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு இயக்கம் பொறுப்பை நான் (யுவன்) ஏற்றிருக்கிறேன். விஜய் வில்சன் ஒளிப்பதிவு எஸ்.எஸ்.கண்ணன் இசை.