யாரோ செய்த தவறுக்கு நாம் தண்டனை அனுபவிப்பதா என்பதை நினைத்தாலே எரிச்சல் வரும். அதுவும் சிறை தண்டனையை அனுபவித்தால் எப்படி இருக்கும்? இந்த வெறுப்பில் மனநிலை பாதிப்பு கூட ஏற்பட்டு விடும். அண்ணன் செய்த காரியத்தால் சிறைக்கு போயிருக்கிறார் தம்பி. அந¢த வெறுப்பில் இருந்தபோது, அண்ணனுடன் பெற்றோர் தொடர்பு கொண்டு பேசி வருவது தெரிந்திருக்கிறது. ஆத்திரத்தில் இருவரையும் கட்டையால் அடித்து கொன்றுவிட்டார்.
சிவகாசியை சேர்ந்தவர் சந்திரசேகரன். மனைவி வசந்தா தேவி. பாலமுருகன், சரவணன் என்ற மகன்கள். சரவணன், பிஎஸ்சி படித்துள்ளார். கேட்டரிங் முடித்து ஓட்டல் வேலைக்கு சென்று வந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. அண்ணன் பாலமுருகன், 13 ஆண்டுக்கு முன்பு தங்கை உறவு முறை கொண்ட பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டு வடமாநிலத்துக்குச் சென்று விட்டார்.
இதற்கு சரவணன் தான் காரணம் என பெண்ணின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் விடுதலையான சரவணனுக்கு, அண்ணன் மீது வெறுப்பு ஏற்பட்டது. அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என பெற்றோரிடம் கூறினார். இதற்கிடையில், பாலமுருகன் பெற்றோருக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை சரவணன் பார்த்து விட்டார்.
ஆத்திரமடைந்த அவர் பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். மனநிலையும் பாதிக்கப்பட்டது. ஒருநாள் வழக்கம்போல் ஓட்டல் வேலைக்குச் சென்ற சரவணன், நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு வந்தார். தூங்கிக் கொண்டிருந்த பெற்றோரை எழுப்பி தகராறு செய்தார். திடீரென கட்டையை எடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த இருவரும் துடிதுடித்து இறந்தனர். பின்னர் பெற்றோரை அடித்துக் கொன்றதாக கூறி போலீசில் சரணடைந்தார்.
சரவணன் படிப்பில் கெட்டிக்காரர். பிஎஸ்சி படிப்பிலும் கேட்டரிங் படிப்பிலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் அண்ணனால் ஏற்பட்ட துன்பத்தை அவரால் மறக்க முடியவில்லை. திருமணம் செய்திருந்தால் கவனம் வேறு பக்கம் போயிருக்கும். நடந்ததை நினைத்து நினைத்து நடைபிணம் போல் வாழ்ந்திருக்கிறார். பெற்றோரும் தனக்கு துரோகம் செய்ததாக நினைத்து ஆத்திரப்பட்டிருக்கிறார். அந்த ஆத்திரம் அவரை மனநோயாளியாக்கி விட்டது. தாங்க முடியாத துரோகம் மனிதனை கொலையாளி யாக்கி விடும். அதுதான் நடந்திருக்கிறது.