நிஜ பிரசவ காட்சி இடம்பெற்ற நடிகை ஸ்வேதா மேனன் படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
திருவனந்தபுரம்: நடிகை ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிகள் சேர்க்கப்பட்ட ‘களிமண்‘ மலையாள படத்துக்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட் மறுத்துள்ளது.பிரபல மலையாள டைரக்டர் பிளஸ்சி ‘களிமண்‘ என்ற மலையாள படத்தை இயக்கி உள்ளார். பிஜூ மேனன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகை ஸ்வேதா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு தாய்க்கும், மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டம் தான் இந்தப் படத்தின் கதை. இந்த படத்துக்காக ஸ்வேதா மேனனின் நிஜ கர்ப்ப காலமும், அவரது பிரசவமும் படம் பிடிக்கப்பட்டது. அடுத்த வாரம் படம் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், ஸ்வேதா மேனனின் பிரசவத்தை படம் பிடித்ததற்கு கேரள சபாநாயகர் கார்த்திகேயன் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரசவத்தை படம் பிடிக்க அனுமதித்த ஸ்வேதா மேனனுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ‘களிமண் படத்துக்கு தடை விதிக்க கோரி இடுக்கியை சேர்ந்த மாடசாமி என்பவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், இதுகுறித்து கேரள அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை ஸ்வேதா மேனன் சுய விருப்பத்தின் பேரிலேயே பிரசவ காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன என்றும், தணிக்கை வாரியம் படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கேரள அரசின் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட் ‘களிமண்‘ படத்துக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. பெண்மையை இழிவுபடுத்தும் எந்த காட்சிகளும் படத்தில் இடம்பெறாததால் படத்தை வெளியிடுவதில் தவறில்லை என்றும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.