திருச்சி: திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில பொருளாளரின் வீட்டில் கேஸ் கட்டரை கொண்டு ஜன்னலை அறுத்து கொள்ளை நடந்துள்ளது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட், ஹனிபா காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜுலு. தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பு மாநில பொது செயலாளராகவும், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில பொருளாளராகவும் உள்ளார். மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்றிரவு குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டில் மர்ம ஆசாமிகள் நடமாடும் சத்தம் கேட்டு விழித்தெழிந்த கோவிந்தராஜுலு, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் அங்கு வருவதற்குள் மர்ம ஆசாமிகள தப்பி சென்றனர்.
வீட்டு முன்பு நின்ற ஆட்டோவை போலீசார் சோதனையிட்ட போது அதில் கேஸ் சிலிண்டர்கள், 50 அடி நீள ரப்பர் குழாய் இருந்தது. மர்ம ஆசாமிகள் வீட்டின் பக்கவாட்டு சந்துக்குள் சென்று சமையல் அறை ஜன்னலை கேஸ் வெல்டர் மூலம் வெட்டி உள்ளே சென்றுள்ளனர். கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் இருந்த பீரோக்களை திறந்து பார்த்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால் கீழ்தளத்தில் உள்ள பூஜை அறைக்குள் புகுந்து சாமி படத்தருகே இருந்த ரூ.6 ஆயிரம் புதிய கரன்சி நோட்டுகள் மற்றும் ஒரு வாட்ச்சை திருடி சென்றுள்ளனர்.
போலீசார் கூறுகையில், வீட்டு முன்பு நின்ற ஆட்டோ ஸ்ரீரங்கம், பெரியார் நகரை சேர்ந்த நாராயணன் (42) என்பவருக்கு சொந்தமானது. அதை ஓராண்டுக்கு முன்பு கோட்டையை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கு விற்றுள்ளார். முத்துராமனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பூஜை அறையில் சாமிக்கு நகைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளி பொருட்கள் இருந்தன. அவற்றை கொள்ளை அடிக்காமல் அங்கிருந்த பணத்தை மட்டும் மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மர்ம ஆசாமிகள் யாரையாவது கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தார்களா என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றனர்.