புதுச்சேரி: புதுவையில் சம்பள பிரச்னையில் கொத்தனார் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம் (27), கொத்தனார். மரக்காணம் அடுத்த கூவாத்தூரில் சில நாட்களாக வேலை பார்த்தார். அவருடன், நண்பர்களான லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த கட்ட விஜி (36), அரிவாமனை பாஸ்கர் (32) ஆகியோரும் கட்டிட வேலைக்கு சென்றனர். அப்போது சம்பளத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக செல்வத்துக்கும், விஜிக்கும் பெரிய தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், கோட்டக்குப்பம் ஆலடிகுப்பத்தில் நேற்று நடந்த கோயில் விழாவில் செல்வம் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள பாரில் செல்வம், விஜி, பாஸ்கர் மது அருந்தினர். அப்போது விஜிக்கும், செல்வத்துக்கும் இடையே மீண்டும் சண்டை வந்தது. பார் ஊழியர்கள் அவர்களை சமாதானம் செய்து வெளியேற்றினர். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்வம் சென்றார்.
சாமிபிள்ளை தோட்டத்தில் செல்வத்தை விஜியும், பாஸ்கரும் வழிமறித்தனர். அவர்கள் கையில் அரிவாள்கள் இருப்பதை பார்த்த செல்வம், அதிர்ச்சியடைந்து ஓடத் தொடங்கினார். கிழக்கு கடற்கரை சாலையில் செல்வத்தை ஓட ஓட விரட்டி 2 பேரும் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த செல்வம் துடிதுடித்து இறந்தார். இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
கொலை குறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். மொரட்டாண்டி அருகே பதுங்கியிருந்த கட்டவிஜி உள்ளிட்ட 2 ரவுடியையும் இன்று மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவையில் வாலிபரை ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.