தி.மலை அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து குழந்தை பலி மக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். பூக்கடை வைத்துள்ளார். இவரது மகள் கீர்த்திகா (2) நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது பேராயம்பட்டு கிராமத்தில் இருந்து கொழுந்தம்பட்டு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர், சகாதேவன் வீட்டு முன்பு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் கீர்த்திகா டிராக்டரின் அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தாள்.
ஆத்திரம் அடைந்த காம்பட்டு கிராம மக்கள், காம்பட்டு கிராமம் வழியாக கரும்பு ஏற்றி கொண்டு எந்த வாகனமும் செல்ல கூடாது. கிராமத்தில் வேகத்தடை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை & கள்ளக்குறிச்சி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தண்டராம்பட்டு தாசில்தார் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், வாணாபுரம் எஸ்ஐ பாரதி ஆகியோர் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பறையம்பட்டு கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ரவியை (35) கைது செய்தனர்.