5 மகள்களை வெட்டி கொன்றவரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடெல்லி: குடும்ப சண்டையில் தனது 5 மகள்களின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த தந்தைக்கு இன்று காலை நிறைவேற்றபட இருந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநி லம் சேகோர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகன் லால் பரிலா. இவருக்கு 2 மனைவிகளும் லீலா, சவீதா, ஆர்த்தி, கன்வர் மற்றும் ஜமுனா ஆகிய 5 மகள்களும் இருந்தனர். மகள் அனைவரும் 6 வயது முதல் 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். வறுமையின் பிடியில் இருந்த குடும்பத்தில் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கடந்த 2010&ம் ஆண்டு ஜூன் 11&ம் தேதி மகன்லாலுக்கும் அவரது 2 மனைவிகளுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த மகன்லால், கோடாரியை எடுத்து தனது 5 மகள்களின் தலையை வெட்டி கொன்றார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் மகன் லாலுக்கு மரண தண்டனை விதித்து விசாரணை கோர்ட் தீர்ப்பளித்தது. இதை போபால் ஐகோர்ட்டும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. கடந்த மாதம் 22&ம் தேதி மகன்லாலின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து மகன்லாலை இன்று காலை தூக்கில் போடுமாறு சேகோர் மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. ஜபல்பூர் மத்திய சிறையில் இன்று காலை மகன்லாலை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் மகன்லாலின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இன்று காலை 10.30 மணிக்கு மனு மீது விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை மகன்லாலின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.