சென்னை:கறிக் குழம்பில் பல்லியை போட்டு கொலை செய்ய முயன்ற தனது மனைவி மற்றும் அவரது காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேன்டீன் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். மயிலாப்பூர் வாரன் சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரபாபு (43). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கூறியிருப்பதாவது:
கீழ்பாக்கத்தை சேர்ந்த சசிப்பிரியா என்பவருக்கும் எனக்கும் 1996 ஆகஸ்ட் 25ம் தேதி திருமணம் நடந்தது. எங்களுக்கு அக்ஷதா, அஸ்வந்த் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நான் மனைவி குழந்தைகளுடன் மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள வாடகை வீட்டில் மகிழ்ச்சியாக இருந்து வந்தேன். மாங்காட்டில் ஒரு மெடிக்கல் கல்லூரியில் கேன்டீன் எடுத்து நடத்தி வந்தேன். அப்போது, அங்கு டாக்டராக பணியாற்றிய பிரவீன் என்பவருடன் எனது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களுடைய பழக்கம் அதிகமானது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நான் மனைவியை கண்டித்தேன். பிரவீனை பார்க்க கூடாது என்று கூறினேன். ஆனால், இருவரும் கேட்கவில்லை. அவர்களின் கள்ளக்காதலுக்கு நான் இடையூறாக இருப்பதாக கூறி என்னை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். கடந்த 2ம் தேதி எனது வீட்டு வேலைக்காரி அனிதாவை (20) செல்போனில் தொடர்பு கொண்ட எனது மனைவி, “வீட்டில் சமைக்கும் மதிய உணவில் பல்லி சேர்த்து விடவேண்டும். கோழிக்கறி குழம்பில் கொதிக்கும்போது, பல்லியை போட்டு கொஞ்ச நேரத்திற்கு பிறகு பல்லியை எடுத்து விட்டால் தெரியாது. என் மீதும், பிரவின் மீதும் சந்தேகம் வராதுஎன சாப்பாட்டில் பல்லியை சேர்த்து விடும்படி கூறி உள்ளார். இதை அனிதா செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். இது குறித்து 2ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக விசாரணை நடத்திய அபிராமபுரம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையில், என் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. எனவே, போலீசார் எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கோழிக்கறி உணவில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்ற எனது மனைவி மற்றும் பிரவீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதல் நடத்த முயற்சித்த கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மயிலாப்பூர் துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.