சிவகாசியில் பரபரப்பு துப்பாக்கியை காட்டி ரகளை: 2 வாலிபர்கள் கைது தீவிரவாத கும்பலுடன் தொடர்பா?
சிவகாசி:சிவகாசி வேலாயுதம் ரஸ்தா சாலையில் தனியார் மது பார் உள்ளது. நேற்று மாலை 2 பேர் குடித்துவிட்டு, பார் ஊழியர்களிடம் தகராறு செய்தனர். அவர்களில் ஒரு நபர் 2 துப்பாக்கிகளை காட்டி பாரில் இருந்தவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவலறிந்த சிவகாசி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், சிவகாசி நகர் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாத வன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த நபர்கள் இருவரையும் பிடித்துச் சென்றனர்.
விசாரணையில் இவர்கள் மும்பை, தானே பகுதியைச் சேர்ந்த சையதுசம்சா மகன் புரோஸ்சையது(40), சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த தஸ்தகீர் பட்டானி மகன் ஷேக்பரீத்(36) என தெரியவந்தது. இதில் புரோஸ்சையது 2 ஏர்கன் பிஸ்டல்கள் மற்றும் ஒரு கத்தி வைத்திருந்தார். இவர்கள் இருவரையும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி வைத்திருந்ததால் சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் இவர்களுக்கு ஏதும் தொடர்பு உள்ளதா?, தீவிரவாதக் கும்பலுடன் இவர்கள் தொடர்பு வைத்துள்ளனரா எனவும், புரோஸ் சையது கொடுத்த முகவரி உண்மைதானா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.