இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று 20&20 போட்டிகளில் ஆடியது. முதல் 2 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா அபாரமாக வென்று தொடரை கைப்பற்றியது. கடைசி 20&20 போட்டி நேற்று ஹம்பன்தோடாவில் நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி பேட்டிங் செய்தது.
டேவிட்சும், டிஹாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். குலசேகரா வீசிய முதல் பந்திலேயே டேவிட்ஸ் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். நெருக்கடியான தருணத்தில் டூபிளஸ்சிஸ் ஜோடி சேர்ந்தார். டூபிளஸ்சிஸ் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இலங்கை வீரர்களின் பந்துவீச்சை அவர் நாலாபுறமும் விளாசி அடித்தார்.
ஸ்கோர் 45ஐ எட்டியபோது டிஹாக் 16 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து டூபிளஸ்சிஸ்சுடன் டும்னி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. டூபிளஸ்சிஸ் 65 பந்துகளில் 85 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். டும்னி 34 பந்துகளில் 51 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
20 ஓவரில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. இதையடுத்து 164 ரன் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தில்ஷானும், ஜெயவர்த்தனேயும் தங்களது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெயவர்த்தனே 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 16 பந்துகளையே சந்தித்த அவர் 7 பவுண்டரிகளை விளாசினார்.
அடுத்து களமிறங்கிய பெரேரா 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் சன்டிமால், மேத்யூஸ் ஆகியோர் தங்கள் பங்கிற்கு தலா 14 ரன்கள் எடுத்தனர். கடைசியாக தில்ஷானுடன் திசரா பெரேரா ஜோடி சேர்ந்து இலங்கை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். தில்ஷான் 51 பந்துகளில் 74 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும்.பெரேரா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 164 ரன்களை எடுத்தது. இந்த தொடரை தென் ஆப்ரிக்கா 2&1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது தில்ஷானுக்கும், தொடர் நாயகன் விருது டும்னிக்கும் வழங்கப்பட்டது.