முயற்சி எடுத்தால் முடியாதது இல்லை. இது பலருக்கு தெரிவதில்லை. இதெல்லாம் நம்மால் முடியுமா என அவநம்பிக்கை படுகிறார்கள். விளைவு தாழ்வு மனப்பான்மையால் தவிக்கிறார்கள். விரக்தி அடைகிறார்கள். கடைசியில் விபரீத முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். ஆங்கிலம் வரவில்லையே என்ற விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கிறார் இன்ஜினியரிங் மாணவர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இசிஇ டிப்ளமோ படிப்பு முடித்தார். பின், கோவை மதுக்கரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஇ 2ம் ஆண்டு நேரடியாக சேர்ந்தார். கல்லூரிக்கு அருகில், நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி படித்து வந்தார். தமிழ்ச்செல்வனுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. தமிழ்வழிக்கல்வியில் படித்த தமிழ்ச்செல்வனுக்கு பாடங்கள் புரியவில்லை. இதுகுறித்து, அவர் பெற்றோரிடம் கூறி புலம்பியுள்ளார்.
இந்நிலையில், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி தமிழ்ச்செல்வன், கல்லூரிக்கு செல்லாமல் அறையிலேயே இருந்தார். வகுப்பு முடிந்து மதியம் சக மாணவர்கள் அறைக்கு திரும்பினர். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறையில் தமிழ்ச்செல்வன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்ச்செல்வன் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், “என் சாவுக்கு யாரும் காரணமில்லை. என்னை இக்கல்லூரியில் சேர்க்க பெற்றோர் அளித்திருந்த ரூ.81 ஆயிரத்தை அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் திருப்பி கொடுக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு படிக்க வரும் மாணவர்கள் பாதி பேருக்கு ஆங்கிலம் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் படித்து புரிந்து கொள்ள முடிவதில்லை. இதனால் தேர்வுகளில் தோல்வி அடைகின்றனர். அரியர்ஸ் சேர்ந்து கொண்டே போகிறது. பெரிய கல்லூரிகளில் இடம் கிடைத்தும் படிக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆங்கிலத்துக்காக தனியாக கிளாஸ் போகலாம். சக மாணவர்களிடம் சந்தேகம் கேட்டு படிக்கலாம். முயற்சி எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆர்வமும் முயற்சியும் இருந்தால் கஷ்டமான எந்த விஷயமும் எளிதாகி விடும். இதைப் புரிந்து கொண்டால் விரக்தி வராது.