ஸ்நோடென்னுக்கு அரசியல் தஞ்சம் ரஷ்யாவின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது ஒபாமா குற்றச்சாட்டு
வாஷிங்டன்:அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்நோடென் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் இணையதளங்களுக்குள் ஊடுருவி ஏராளமான தகவல்களை அமெரிக்க ராணுவம் திரட்டியுள்ளது என அம்பலப்படுத்தினார். இதனால் அவரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து மாஸ்கோ விமான நிலையத்தில் ஸ்நோடென் தஞ்சம் அடைந்தார். ஸ்நோடென்னுக்கு ஈகுவடார், வெனிசூலா, நிகரகுவா உள்ளிட்ட நாடுகள் அரசியல் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளன. ஸ்நோடென்னின் பாஸ்போர்ட்டை அமெரிக்கா முடக்கியதால் அவர் மாஸ்கோவை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஸ்நோடென்னுக்கு விக்கிலீக்ஸ் இணையதள அதிபர் ஜுலியன் அசாஞ்சேவின் குழுவினர் உதவி வருகின்றனர். ஸ்நோடென்னுக்கு ரஷ்யாவில் தஞ்சம் அளிக்கக் கூடாது என்று ஒபாமா, புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதனை புடின் மறுத்துவிட்டார். இதனால் ரஷ்யாவில் செப்டம்பரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் திட்டத்தை ஒபாமா ரத்து செய்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் ஸ்நோடென்னுக்கு மாஸ்கோவில் தங்க ரஷ்யா அரசு தற்காலிக அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து நேற்று ஒபாமா அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், ரஷ்யா தொடர்ந்து அமெரிக்காவுடன் பனிப்போர் மனநிலையுடன் செயல்பட்டு வருகிறது.
என்எஸ்ஏவின் முன்னாள் ஊழியர் ஸ்நோடென்னுக்கு தற்காலிக தஞ்சம் அளித்த ரஷ்ய அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஸ்நோடென் அமெரிக்காவிற்கு திரும்பி வழக்கை சந்திக்க ரஷ்யா உதவ வேண்டும். ஆனால் ரஷ்யா இந்த விவகாரத்தில் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று தெரிவித்தார். செப்டம்பரில் நடக்கும் ஜி20 நாடுகளின் மாநாட்டில் ஒபாமா கலந்து கொள்வார். ஆனால் ஸ்நோடென் விவகாரம் காரணமாக புடினை சந்திக்க மாட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.