வேலூர்:மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு டேங்கர் லாரியில் கொண்டு சென்ற பர்னஸ் ஆயிலை முறைகேடாக விற்பனை செய்த இன்ஜினியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அனல்மின் நிலையத்தில் பாய்லரை சூடேற்ற பர்னஸ் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆயில் சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. டேங்கர் லாரியில் கொண்டு செல்லும் போது வழியில் முறைகேடாக குறைந்த விலைக்கு பாதி ஆயிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூர் குடிமைப் பொருள் வழங் கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பள்ளிகொண்டா செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு பர்னஸ் ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரியை வழிமடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் 16 ஆயிரம் லிட்டர் பர்னஸ் ஆயில் ஏற்றப்பட்டதற்கான பில் இருந்தது. ஆனால் லாரியில் 8 ஆயிரம் லிட்டர் ஆயில் மட்டுமே இருந்தது.
இதையடுத்து சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவர்கள் முருகன் (29), மதன்ராஜ் (23) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் சென்னை அம்பத்தூரில் லாரியை நிறுத்தி, சென்னை பாடியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு 8 ஆயிரம் லிட்டர் ஆயிலை விற்றதாக கூறினர். இந்த மோசடிக்கு மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக இருக்கும் மணிவேல் (40) என்பவரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. பாதியளவுக்கு மட்டுமே ஆயில் வந்திருந்தாலும் 16 ஆயிரம் லிட்டர் ஆயிலும் பெறப்பட்டதாக கணக்கு எழுதி மோசடி செய்துள்ளனர். ஆயில் விற்ற பணத்தை பங்கிட்டு கொண்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து 2 டிரைவர்கள், இளநிலை பொறியாளர் மணிவேல், ஆயிலை வாங்கிய பன்னீர்செல்வம் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக புரோக்கர் பொன்ராஜ், லாரி உரிமையாளர் ரமேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். டேங்கர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.