மேட்டூர்:கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 2 தினங்களாக கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வரத்து நீடித்ததால், உபரி நீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். நேற்று காலை அணையின் நீர்மட்டம் 117 அடியாக இருந்தபோது பாதுகாப்பு கருதி 16 கண் மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நீர் வரத்து ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமானதால், நேற்றிரவு 9 மணிக்கு அணை முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து உபரி நீர் திறப்பு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நள்ளிரவில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட்டது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 47 ஆயிரத்து 209 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணை நிரம்பி வழிகிறது. 1 லட்சத்து 11 ஆயிரத்து 512 கனஅடி நீர், 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் போக்கி பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே, உபரிநீரை வெளியேற்றும் 16 கண் மதகு பாலத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி நதி செல்லும் பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதிகளில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பவானி நகரில் வெள்ளம் பெருக்கெடுத் து ஓடுகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை காலி செய்துள்ளனர். இதுபோல மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதியில் உள்ள காவிரி கரையோரங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.