கள்ளக்குறிச்சி:சின்னசேலம் வனப் பகுதியில் காட்டு யானைகள் 5வது நாளாக முகாமிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், தீப்பந்தம் கொளுத்த வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வனப் பகுதியில் கடந்த 1ம் தேதி முதல் 6 காட்டு யானைகள் புகுந்து கரும்புகள், வாழை, நெல் பயிர்களை நாசம் செய்தன. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களும் அவை அட்டகாசத்தில் ஈடுபட்டன. நேற்று சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பாதரம்பள்ளம் வனப் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் இன்று கச்சிராயபாளையம் அருகே உள்ள பொட்டியம் சாலை ஊத்து ஓடைக்காடு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
தகவல் அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று யானைகள் ஊருக்குள் புகாமல் கண்காணித்து வருகின்றனர். யானைகளின் தொடர் அட்டகாசத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், கச்சிராயபாளையம், எடுத்தவாய் நத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் வசிக்க வேண்டும். எந்த நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். யானைகள் நடமாடும் பகுதியில் பொதுமக்கள் முகாமிட்டு வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். யானைகள் கூட்டத்தை பொதுமக்கள் பின்தொடர வேண்டாம். இளைஞர்கள் இரவு நேரங்களில் தீ மூட்டம் போடுவது, மேள, தாளம் அடிப்பதை தவிர்க்க வேண்டும். மேள சத்தத்தால் யானைகள் மிரண்டு தாறுமாறாக ஓடுகின்றன. எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்Õ என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.