தளி அருகே யானை தூக்கி வீசியதில் முதியவர் பலி
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள தேவர்பெட்டா பகுதியை சேர்ந்தவர் புட்டண்ணா (70). நேற்று முன்தினம் மாடுகளை தேவர்பெட்டா வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அன்று மாலை மாடுகள் மட்டும் வீடு திரும்பின. இரவு நீண்ட நேரமாகியும் புட்டண்ணா வரவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மகன் நாகராஜ் மற்றும் உறவினர்கள் நேற்று வனப்பகுதியில் தேடினர்.
அப்போது தேவர்பெட்டாவில் இருந்து 3 கிமீ தொலைவில் பேல்கரை ஒத்தையடி பாதை அருகே புட்டண்ணாவின் செருப்பு, வேட்டி சிதறி கிடந்தது. அருகே ஒரு பாறையில் புட்டண்ணா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மாடு மேய்க்கும் போது யானைகள் அவரை தூக்கி வீசியுள்ளன. இதில் பாறையில் பட்டு இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தளி போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்.ஐ. ரஜினி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.