மசூதி சுவரை இடித்ததாக புகார் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை: உ.பி. அரசு நடவடிக்கை
லக்னோ:துணை கலெக்டர் துர்கா சக்தியை உபி அரசு கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்தது. மணல் கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்த காரணத்துக்காகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின. துர்கா சக்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி துர்கா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கும் படி உ.பி. அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் துர்கா சக்திக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றை உ.பி. அரசு தயார் செய்துள்ளது. இதன் ஒரிஜினல் காபி நேற்று மாலை துர்கா சக்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீரட் மாவட்ட கலெக்டர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.
மசூதியின் சுவரை இடிப்பதற்கு முன் அதற்கான சட்டவிதிமுறைகளை துர்காசக்தி கடைபிடிக்கவில்லை என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதி கட்டியது தொடர்பாக எவ்வித பிரச்னையும் அந்த பகுதியில் ஏற்படாத நிலையில் அந்த பகுதிக்கு துர்கா சென்றது ஏன் எனவும் இந்த குற்றப்பத்திரிகையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து 15 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையின் நகல், மீரட் கலெக்டரின் அறிக்கை மற்றும் சஸ்பென்ஷன் உத்தரவு ஆகியவற்றின் நகல்கள் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகைக்கு துர்கா அளிக்கும் பதிலை பொறுத்து அவரது விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.