தெலங்கானா முடிவு மறுபரிசீலனை? ஆந்திர காங்கிரஸ் தலைவர் தகவல்
ஐதராபாத்:ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க காங்கிரஸ் மேலிடம் கடந்த வாரம் சம்மதம் தெரிவித்தது. இதை தொடர்ந்து ஒன்று பட்ட ஆந்திராவை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த பிராந்தியத்தை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தெலங்கானா கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தெலங்கானா முடிவை காங்கிரஸ் மேலிடம் மறுபரிசீலனை செய்யும் என ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் போத்சா சத்யநாராயணா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திராவை பிரிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அனைத்து பிராந்திய மக்களின் உணர்வுகளையும் மேலிடம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆந்திர சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தால், தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படாது. ஐதராபாத் பிரச்னை மற்றும் நதி நீர், வருவாய் பங்கீடு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தெலங்கானா தனி மாநில நடவடிக்கைகளை முன் எடுத்து செல்வதற்கு முன்பு இந்த பிரச்னைகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு போத்சா சத்யநாராயணா கூறினார்.
இதற்கிடையில் ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் சீமாந்திர பிரமுகர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த விஷயத்தில் தலையிட இது சரியான நேரம் இல்லை எனக்கூறி சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.