நிச்சயம் செய்த பிறகு காதலியை திருமணம் செய்ய மறுத்த கல்லூரி ஆசிரியர் அதிரடி கைது
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதலியை திருமணம் செய்ய மறுத்த கல்லூரி விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நிச்சயத்தின்போது கொடுத்த பரிசுப் பொருட்களை பெண் வீட்டார் திரும்ப வாங்கினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு பஞ்சாலைத் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அறிவழகன் (28). தனியார் கல்லூரியில் விரிவுரையாளர். நாகை மாவட்டம் மணல்மேடு தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் சந்தியா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அறிவழகனும், சந்தியாவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூன் 16ம் தேதி வைத்தீஸ்வரன் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், சந்தியாவை திருமணம் செய்ய முடியாது என அறிவழகன் திடீரென மறுத்துள்ளார். இதுபற்றி சந்தியாவின் தந்தை, அறிவழகனிடம் கேட்டபோது அவரை திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மணல்மேடு போலீசில் சந்தியாவின் தந்தை புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். நிச்சயதார்த்தத்தின்போது வழங்கப்பட்ட வெள்ளி குத்து விளக்கு போன்ற பரிசுப் பொருட்களை பெண் வீட்டார் திரும்ப பெற்றனர்.