பிலிப்பைன்சில் கனமழை வெள்ள பாதிப்பால் 2.5 லட்சம் பேர் தவிப்பு
மணிலா:பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் வீடுகள் இடிந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மகுவைன்தானோ மாகாணத்தில் ஏராளமான கிராமங்கள் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு லட்சக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவிக்கின்றனர்.
வெள்ளத்தில் பலர் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு மீட்பு பணிகளும் தொய்வடைந்துள்ளன. மழையால் 20 நகராட்சிகளை சேர்ந்த 185 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்துக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த கிராமங்களை சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வரலாறு காணாத மழையால் பிலிப்பைன்சின் மகுவைன்தானோ மாகாணம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.