தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
பவானி:சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம், பதவியேற்ற பிறகு முதல்முறையாக நேற்று தனது சொந்த ஊருக்கு வந்தார். அவரை மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். கடந்த மாதம் 19&ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சதாசிவம் பதவியேற்றார். இவர், ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள காடப்ப நல்லூரில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முதல்முறையாக தலைமை நீதிபதியாக பதவியேற்றது, தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நாட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சதாசிவம், தனது சொந்த ஊரான காடப்ப நல்லூருக்கு நேற்று வந்தார். அவரை ஊர் மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சண்முகம், எஸ்.பி பொன்னி ஆகியோரும் தலைமை நீதிபதியை வரவேற்றனர்.
இதையடுத்து, தனது வீட்டுக்கு சென்றார் நீதிபதி சதாசிவம். உயர் பதவி வகித்து வரும் மகனை கண்ட மகிழ்ச்சியில் அவரது அம்மா நாச்சியம்மாள், அவரை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். நீதிபதிகள், வக்கீல்கள் உறவினர்கள், நண்பர்கள், ஊர் பிரமுகர்கள் ஆகியோர் நீதிபதி சதாசிவத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.