சங்கரன்கோவிலில் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மோதல் பஸ் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் பஸ்நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. தினமும் மதியம் 12.20க்கு இங்கிருந்து சிவகிரிக்கு ஒரு தனியார் பஸ்சும், 12.35க்கு பனையூருக்கு தனியார் பஸ் ஒன்றும் செல்கின்றன. இதில் சிவகிரி செல்லும் பஸ்,நேரம் கடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பஸ் நிலையத்திலிருந்து வெளியில் கிளம்பி செல்வதில்லையாம். இதனால் 12.35க்கு புறப்படும் பனையூர் பஸ்சிற்கு இவர்கள் இடையூறு செய்வதால் 2வது புறப்படும் பஸ்சில் பயணிகள் அதிகம் ஏறுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு பஸ் டிரைவர்களிடையே தகராறு ஏற்படுவதுண்டு.
நேற்றும் இதுபோல் பயணிகள் நிரம்பிய நிலையில் சிவகிரி செல்லும் பஸ் டிரைவர் வண்டியை கிளப்பாமல் காலம் கடத்தி வந்தாராம். இதனால் பனையூர் பஸ் டிரைவருக்கும் சிவகிரி பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. அந்த நேரம் பனையூர் பஸ் உரிமையாளர் அங்கே வந்தார். இதில் ஆத்திரமடைந்த அவர் டிரைவர் சீட் சைடில் உள்ள கண்ணாடியை கையால் ஓங்கி அடித்து உடைத்தார். இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பஸ் நிலையத்திலிருந்து எந்த பஸ்சும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து டவுன் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை எச்சரித்து அனுப்பினர்.