மதுரையில் இன்று காலை பயங்கரம் : பைனான்சியர் கழுத்தறுத்து கொலை
மதுரை: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் வசித்தவர் போஸ்ராஜன் (65), பைனான்சியர். இவரது மனைவி இறந்து விட்டார். இவருக்கு 4 மகள்கள். இவர் மட்டும் வீட்டில் தனியே வசித்தார். தினமும் வட்டி வசூல் செய்ய, காரில் நகரின் பல பகுதிகளுக்கு சென்று வருவார். இன்று காலை வட்டி வசூலிக்க சோலை அழகுபுரம், எம்.கே.புரம் பகுதிக்கு சென்றார்.
இந்நிலையில், போஸ்ராஜன் அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது காலை 9 மணியளவில் தெரிய வந்தது. அவரது உடலில் 6 இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. இவர் வட்டி வசூலிக்க சென்ற கார், சோலை அழகுபுரத்தில் அனாதையாக நின்றிருந்தது. போலீசார் காரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், வட்டி வசூலிக்க சென்ற போஸ்ராஜனை, சோலை அழகுபுரத்தில் இருவர் சந்தித்துள்ளனர். காரில் இருந்து போஸ்ராஜனை இறக்கி அவரை அவரது வீட்டுக்கே இருவரும் அழைத்து சென்றுள்ளனர். வீட்டில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக போஸ்ராஜனுக்கும் அந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், போஸ்ராஜனை கொலை செய்து விட்டு இருவரும் தப்பியுள்ளனர். கொலை நடந்த இடத்தில் ரத்தம் படிந்த கத்தி மற்றும் அரிவாளையும், கொலையாளிகள் விட்டு சென்ற இரு ஜோடி செருப்புகளையும் போலீசார் கைப்பற்றினர். திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.