கட்டாயப்படுத்தி யாரையும் காதலிக்க முடியாது. இது பலருக்கு தெரிவதில்லை. முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மிரட்டியும் காதலிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கெஞ்சிக் கூத்தாடி காதலிக்க நினைக்கிறார்கள். சமீப காலமாக, Ôஇன்டர்நெட்டில் உன் படத்தை கிராபிக்ஸ் செய்து ஆபாச படத்தை போட்டு விடுவேன் என பிளாக்மெயில் செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். இப்படித்தான் திருப்பூரில் பிளஸ்2 மாணவியை காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்திருக்கிறார் வாலிபால் பயிற்சியாளர்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக். ஒப்பந்த அடிப்படையில் தனியார் பள்ளி ஒன்றில் வாலிபால் பயிற்சியாளராக பணியாற்றுகிறார். அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி ஒருவரை காதலித்தார். ஆனால் அந்த மாணவி கார்த்திக்கை விரும்பவில்லை. மாணவி போகும் இடமெல்லாம் கார்த்திக் பைக்கில் பின்தொடர்ந்து சென்று, காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்து வந்தார். ஒருநாள் மாலை அந்த மாணவி டியூசனுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, டியூசன் சென்டர் அருகே பைக்குடன் நின்ற கார்த்திக், மாணவியை வழிமறித்து ‘முக்கியமான விஷயம் பேச வேண்டும். பைக்கில் ஏறு‘ என கூறியுள்ளார். மாணவி மறுக்கவே, அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். பயந்துபோன மாணவி பைக்கில் ஏறினார். அவரை ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்து சென்ற கார்த்திக், ‘ஒரு வாரம் டைம் தருகிறேன். யோசித்து பதில் கூறு. பிடிக்கவில்லை என்றால் உனது போட்டோவை ஆபாசமாக கிராபிக்ஸ் செய்து நெட்டில் ஏற்றிவிடுவேன். கொலை செய்யவும் தயங்கமாட்டேன்‘ என கூறி மிரட்டிவிட்டு சென்றார். வீடு திரும்பிய மாணவி இதுபற்றி பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் உடுமலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். அவர் மீது ஆள் கடத்தல், கையால் அடித்தல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரை பணியில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ளது.
பிடிக்காதவர்களை வற்புறுத்தி காலம் முழுவதும் காதலிக்கலாம் என நினைப்பது முட்டாள்தனம். காதல் என்பது தானாக வர வேண்டும். வற்புறுத்தி, மிரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் பின்னாளில் அது பிரச்னையில்தான் முடியும். விவாகரத்து, தற்கொலை, கொலை, கள்ளக்காதல் என வேண்டாத விஷயங்களை கணவன், மனைவி இருவருமே சந்திக்க நேரிடும்.