ஆசைப்படும் எல்லாமே எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. நினைத்த வாழ்க்கை கிடைக்காவிட்டால் கிடைத்த வாழ்க்கையை அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அந்த குணம் இல்லாத தால்தான் இன்றைக்கு கள்ளக்காதல்களும் அதன்காரணமாக நடக்கும் கொலைகளும் அதிகரித்து வருகின்றன.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த நங்கமங்கலம் ஏரியில் நிர்வாண நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது தனது அண்ணன் மகள் கங்காதேவியாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார் ராணிப்பேட்டையில் ஆசிரியையாக உள்ள திலகவதி. உறவினர்கள் வந்து பார்த்து, அதை உறுதி செய்தனர். சென்னை திருவான்மியூரை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர் சரவணனின் மனைவிதான் கங்காதேவி (27). திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தை இல்லை. கடந்த 13&ம் தேதி அம்மா வீட்டுக்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்ற கங்காதேவி, சில மணி நேரம் கழித்து தனது அண்ணன் ரவிச்சந்திரனுக்கு போன் செய்துள்ளார். ‘சென்ட்ரலில் இருக்கிறேன். என்னை ஒருவன் அடித்து இழுத்து செல்கிறான். காப்பாற்றுங்கள்’ என கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் ரவிச்சந்திரன். அவர்களோ, ‘சென்ட்ரலில்தான் சம்பவம் நடந்துள்ளது. பெரியமேடு போலீசில் புகார் செய்யுங்கள்’ என்று கூறிவிட்டனர். பெரியமேடு சென்றபோது, ‘உன் தங்கை கணவர் வீட்டில் இருந்துதான் காணாமல் போயுள்ளார். அதனால் திருவான்மியூரில் புகார் செய்யுங்கள்’ என்றனர். இப்படி ஸ்டேஷன் ஸ்டேஷனாக அலைந்ததில் 2 நாள் ஓடிவிட்டது. பின்னர் ஒரு வழியாக திருவான்மியூர் போலீசார் புகாரை பெற்றுள்ளனர்.
திருநின்றவூரை சேர்ந்த கார்த்திக்கை கங்காதேவி காலித்துள்ளார். ஆனால், சரவணனுக்கு அவரை திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணத்துக்கு பிறகும் கார்த்திக்குடனான தொடர்பை கங்காதேவி துண்டிக்கவில்லை. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கங்காதேவி காணாமல் போன அதே நாளில் கார்த்திக்கும் மாயமானார். இதனால், கார்த்திக்தான் கங்கா தேவியை போன் செய்து வரவழைத்து கொலை செய்துள்ளார் என உறுதியானது. மாயமான கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணத்துக்கு முன்பு காதல் வயப்படுவது எல்லாருக்கும் உள்ள உரிமை. காதல் கைகூடிவிட்டால் பிரச்னை இல்லை. விதியால் வேறு ஒருவரை மணக்க நேரும்போது, பழைய காதலை மறந்துவிட வேண்டும். கல்யாணத்துக்கு பிறகும் அதை தொடர நினைத்தால் மூன்று பேரின் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்.