ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. 3 இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதலே மழை பெய்து வருகிறது. கூடலூர், பந்தலூர், ஊட்டி, நடுவட்டம், மஞ்சூர் போன்ற பகுதிகளில் இடைவிடாது காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்கிறது. கடந்த 3 நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நடுவட்டம், ஊட்டி, கிளன்ட்மார்க்கன், கல்லட்டி போன்ற பகுதிகளில் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. நேற்று முன்தினம் ஊட்டி& மசினக்குடி சாலையில் கல்லட்டி அருகே சாலையோரம் இருந்த ராட்சத கற்பூர மரம் விழுந்து சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கிரேன் மூலம் மரத்தை அகற்றினர். நேற்றிரவு பெய்த மழையில் மீண்டும் அதே இடத்தில் மற்றொரு ராட்சத கற்பூர மரம் சாலையில் விழுந்தது. காலையில் தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இச்சாலையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் அருகே நேற்றிரவு ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால் இங்கும் போக்குவரத்து தடைபட்டது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ரோஸ்மவுண்ட் பகுதிக்கு செல்லும் சாலையிலும் மரம் ஒன்று மின்கம்பி மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஊட்டி, நடுவட்டம், கிளன்மார்க்கன், பைகாரா மற்றும் மஞ்சூர் பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கும் அபாயம் நீடிக்கிறது. ஊட்டியில் பெய்த மழையளவு(மி.மீ) விபரம்: ஊட்டி 12, நடுவட்டம் 86, கல்லட்டி 13, கிளன்மார்க்கன் 50, குந்தா 32, ஹெத்தை 4, எமரால்டு 52, அவிலாஞ்சி 160, கின்னக்கொரை 2, அப்பர்பவானி 120, குன்னூர் 7.4, பர்லியார் 6, கேத்தி 18, கோத்தகிரி 5, கோடநாடு 6, கூடலூர் 68, தேவாலா 72 மிமீ மழை பதிவாகியுள்ளது.