உளுந்தூர்பேட்டை அருகே துணிகரம் அம்மன் கோயில் உண்டியல் திருடிய வாலிபரை கிராம மக்களே மடக்கினர்
உளுந்தூர்பேட்டை:விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருக்கோவிலூர் ரோட்டில் புகைப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று மாலை ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று அதிகாலை கோயில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். அப்போது பைக்கில் 2 மர்மநபர்கள் கோயில் உண்டியலை திருடிச் செல்ல முயன்றனர். அவர்களை, கிராம மக்கள் சுற்றி வளைத்தனர். ஒருவர் தப்பி ஓடினார். பைக், கோயில் உண்டியலுடன் மற்றொருவரை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
எலவனாசூர்கோட்டை போலீசாரிடம் மர்மநபரை ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் வாழப்பாடி குறிஞ்சி நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரவி (35) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் பைக், உண்டியலை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.