துறைமுக தொழிலாளர் சம்பளம் 20 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு கோரிக்கை
சென்னை: சென்னை துறைமுக அம்பேத்கர் தொழிற்சங்க பொதுச்செயலாளர் நன்மாறன் விடுத்துள்ள அறிக்கை:
அகில இந்திய துறைமுக தொழிலாளர்களின் புதிய சம்பள பேச்சுவார்த்தை கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. இதில் சங்கங்கள் சார்பாக தொழிலாளர்களின் சம்பளத்தை 35 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், நிர்வாகம் தரப்பில் 9 சதவீதம் சம்பள உயர்வு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலேயே ஒரு காலத்தில் துறைமுக தொழிலாளர்கள்தான் அதிக சம்பளம் பெற்று வந்தனர். ஆனால், இன்று மிகவும் குறைந்த சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர். 2007ம் ஆண்டு வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, துறைமுக தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். புதிய சம்பள உயர்வை 20 சதவீதத்திற்கு குறையாமல் வழங்க மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த அறிக்கையின் நகலை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு நன்மாறன் அனுப்பியுள்ளார்.