நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு பிச்சைதான் எடுக்க வேண்டும் காங். அமைச்சர்கள் மீது மம்தா கடும் தாக்கு
கொல்கத்தா:நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு மேற்குவங்க காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிச்சைதான் எடுக்க வேண்டும் என மேற்கு வங்க
முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முர்ஷிதாபாத்
மாவட்டம் பெர்ஹம்பூரில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பேசியதாவது:
மேற்கு வங்க அரசு பற்றியும் திரிணாமுல் காங்கிரஸ் குறித்தும் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இன்று அவர்கள்
அமைச்சர்களாக இருப்பதற்கு நாம்தான் காரணம் என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ்
படுதோல்வி அடையும் என்பதை அனைவரும் அறிவார்கள். மக்களவை தேர்தலுக்கு பின்பு இப்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் பிச்சை
எடுக்கத்தான் போக வேண்டும்.
மாநில அரசின் வருவாயிலிருந்து பெரும் பகுதியை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் உத்தரகண்டில் மழை வெள்ளத்தில் சிக்கிய யாத்ரீகர்களை திரும்ப அழைத்து வர ரயில்வேக்கு
நாம் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆபத்து காலத்தில் கூட மத்திய அரசு உதவ மறுக்கிறது. இவ்வாறு மம்தா பேசினார்.