பண்ருட்டி:பண்ருட்டி மருந்து கடை ஊழியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது மனைவி, கர்ப்பப் பையில் பிரச்னை என்று கூறி ஓராண்டாக உறவை மறுத்து வந்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (27), மருந்து கடை ஊழியர். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி கொக்குபாளையம் தட்டாஞ் சாவடியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 1ம் தேதி கடலூரில் இருந்து பைக்கில் பண்ருட்டி சென்றபோது ராசாப்பாளையம் என்ற இடத்தில் மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியால் குத்தியதில் சீனிவாசன் இறந்ததாக போலீசில் கல்பனா புகார் கொடுத்தார். இந்த வழக்கில் பண்ருட்டி மேலப்பாளையத்தை சேர்ந்த தினேஷ்பாபு (27), சென்னை எழும்பூர் கோர்ட்டில் 6ம் தேதி சரணடைந்தார். அவரது நண்பர் போட்டோகிராபர் முரளி (27) என்பவர் கைது செய்யப்பட்டார்.
சீனிவாசன் மனைவி கல்பனா, பண்ருட்டி விஏஓ சரவணன் முன்னிலையில் நேற்று சரணடைந்தார். பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட கல்பனா அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:எனது தோழி வித்யா மூலம் அறிமுகமான தினேஷ்பாபுவை காதலித்தேன். ஆனால் அவர் வேறு சாதி என்பதால் பிரச்னை ஏற்படும் என்று திருமணத்துக்கு மறுத்துவிட்டேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும் உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது.
நாங்கள் சென்னையில் குடியேறினோம். முதலிரவில் கணவர் சீனிவாசனிடம் எனக்கு கார் விபத்தில் முதுகெலும்பு, கர்ப்ப பை பாதிக்கப்பட்டுள்ளது. அது சரியாகும் வரை உறவு வைத்து கொள்ள வேண்டாம் என கூறினேன். கணவர் வேலை காரணமாக வெளியே செல்லும் போது, தினேஷ் பாபுவை சென்னை வர சொல்லி உல்லாசமாக இருப்பேன். கார் விபத்தில் எனது உடல் நிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி கணவருடன் சேர்ந்து இருப்பதை தவிர்த்தேன்.
சந்தேகம் அதிகமானதால் அவரை கொல்ல திட்டமிட்டேன். தினேஷ் பாபுவிடம் இதுகுறித்து கூறி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றேன். கணவரை கொலை செய்ய திட்டமும் தீட்டினோம். அதற்கேற்ப திருமண நாளை கொண்டாட கடந்த 31ம் தேதி திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் போது கொலை செய்ய முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. மறுநாள் நானும், சீனிவாசனும் கடலூர் சில்வர் பீச் சென்று விட்டு திருவந்திபுரம்&பாலூர் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தோம்.
அப்போது தினேஷ்பாபு, முரளி ஆகியோர் பைக்கில் வந்ததால் என்னிடம் சீனிவாசன் தகராறு செய்தார். உடனே அவரை கொன்று விடுங்கள் என தினேஷ்பாபு, முரளி ஆகியோரிடம் கூறினேன். முரளி கத்தியால் முதலில் குத்தினார். கணவர் தப்பிக்க முயன்ற போது தினேஷ் பாபு முரளியிடம் கத்தியை வாங்கி சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே கணவர் இறந்தார். பின்னர் விஏஓவிடம் சரணடைந்தேன். இவ்வாறு கல்பனா கூறியுள்ளார்.
திருமண நாளில் கொன்ற கல்பனா
கணவரை கொன்ற கல்பனாவுக்கு ஜூன் 1ம் தேதி திருமண நாளாகும். அவரது பெற்றோருக்கு சொந்தமான கற்பூர கம்பெனி எரிந்தது ஜூன் 1ம் தேதி, இதே போல் கடந்த ஜூன் 1ம் தேதி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக கள்ளக் காதலன் தினேஷ்பாபுவிடம் செல்போனில் பேசி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஓராண்டாக கணவரை கொன்று விடு என்று அடிக்கடி மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதுவும் போலீசுக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் திருமண நாளை கொண்டாட கடலூர் வந்து ஊர் திரும்பும் போதும் வழக்கமாக நெல்லிக்குப்பம் வழியாக செல்வதற்கு பதில் பாலூர் வழியாக செல்லலாம் என கணவரை நச்சரித்திருக்கிறார். எனவே திட்டமிட்டு கணவனை கல்பனா தீர்த்து கட்டியிருக்கிறார். இந்த தகவல்கள் போலீசார் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.