திருப்பதி:மாமூல் கேட்டு திருநங்கையை காரில் கடத்தி சித்ரவதை செய்த 10 பேர் கும்பலை திருப்பதி தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.திருப்பதி அடுத்த திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் செல்வி சாந்தி (26), திருநங்கை. இவர் மாவட்ட எய்ட்ஸ் நிவாரண துறையில் திட்ட அதிகாரியாக உள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் திருப்பதி எஸ்பிவி நகர் பகுதியில் உள்ள சாலையில் செல்வி சாந்தி மயங்கி கிடந்தார். ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து தாமினேடு பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த திருநங்கைகள் தண்ணீர் தெளித்து செல்வி சாந்தியை எழுப்பினர்.
மிரட்டி பணம் வசூல் செய்யும் திருநங்கை மற்றும் மர்ம நபர்கள் தன்னை கடத்தி சித்ரவதை செய்ததாக கூறினார். இதுகுறித்து திருச்சானூர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:திருப்பதியில் நடக்கவுள்ள எய்ட்ஸ் நோயாளிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தேன். அப்போது, காரில் வந்த நெல்லூரை சேர்ந்த திருநங்கை அலேக்கியா, அவரது கணவர் கிரி மற்றும் 8 பேர் என்னை பலவந்தமாக கடத்தி சென்றனர். அலேக்கியா தாதா போல செயல்படுகிறார். ஒவ்வொரு திருநங்கையும் அவருக்கு மாதாமாதம் ரூ.5 ஆயிரம் மாமூல் தரவேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தேன்.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு தாமினேடு பகுதியை சேர்ந்த ஹாசினி என்ற திருநங்கை கடத்தப்பட்டார். இதுதொடர்பான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி, அவர்கள் என்னை 2 நாட்கள் தனி அறையில் அடைத்து வைத்து, அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். மயங்கிய நிலையில் என்னை இங்கு வீசிவிட்டு சென்றுள்ளனர்.இவ்வாறு புகாரில் செல்வி சாந்தி கூறினார்.எஸ்.ஐ. பிரவீன்குமார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அலேக்கியா மற்றும் கும்பலை தேடி வருகிறார். தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.