டெல்லி போலீசில் காலியாக உள்ள 7000 பணியிடங்களை நிரப்ப மத்திய உள்துறை உத்தரவு
புதுடெல்லி:போலீஸ் துறையில் காலியாக உள்ள 7 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப டெல்லி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி போலீஸ் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லியில் இளைஞர்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்து. ஐகோர்ட்டிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் பல்வேறு பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. ஆட்கள் பற்றாக்குறை, விஐபிக்கள் பாதுகாப்பு பணி என பல்வேறு காரணங்களால் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க முடியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமூக ஆர்வலர்களும் இந்த கருத்தை முன்வைத்தனர்.
இதைத் தொடர்ந்து டெல்லி போலீசை பலப்படுத்த உள்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, காலியாக உள்ள இடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் 1000 பெண் போலீசாரும் அடங்குவர். இதுதவிர புதிதாக 370 வாகனங்கள் வாங்கவும் கடந்த பிப்ரவரி மாதம் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. தற்போது 16 ஜெயின் வேன்கள், 8 டாடா சபாரிகள், 12 டொயோடா இன்னோவாக்கள், 2 பஸ்கள் வாங்க ரூ.30 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.