இந்திய வம்சாவளி டாக்டர் தெ.ஆப்ரிக்காவில் சுட்டு கொலை மர்ம கும்பல் தப்பியோட்டம்
ஜோகன்னஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவின் குவாசுலு நேட்டால் மாகாணத்தின் தலைநகர் பீட்டர் மரிட்ஸ்பர்க். இந்நகரின் கிரேடவுண் சாலையில் மருத்துவமனை நடத்தி வந்தவர் டாக்டர் பவிஷ் ஸ்ரீராம். இவருடைய மனைவி யுவாடியா சிங். வக்கீலாக பணிபுரிகிறார். இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். டாக்டர் பவிஷுக்கு மர்ம நபர்கள் அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். அதற்கான காரணம் தெரியவில்லை.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மருத்துவமனையில் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல வெளியில் வந்தார். காரில் ஏறும் போது மர்ம நபர்கள் சிலர் அங்கு திடீரென வந்தனர். பவிஷ் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே டாக்டர் பவிஷ் இறந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
டாக்டரை சுட்டுக் கொன்றதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.