ஐபிஎல் தொடரில் 57வது லீக் ஆட்டம் நேற்று இரவு டெல்லியில் நடந்தது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் வார்னர் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய பணித்தார். புஜாராவும், கெய்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டிகளில் சிக்சர் மழை பொழிந்த கெய்ல் இந்த முறை ஏமாற்றம் அளித்தார். அவர் 4 ரன்னுக்கு இர்பான் பதான் பந்துவீச்சில் போல்டானார்.
புஜாரா 17 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கோஹ்லியுடன், ஹென்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை சீராக உயர்த்தினர். கோஹ்லி 14 ரன்னில் இருக்கும் போது கேட்ச் வாய்ப்பை சேவக் தவறவிட்டார். ஸ்கோர் 89ல் இருக்கும் போது ஹென்ரிக்ஸ் 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு டிவில்லியர்ஸ் களமிறங்கினார். இருவர்கள் கூட்டணி அதிரடியாக ஆடி அனல் பறக்க செய்தனர். கடைசி 4 ஓவரில் டெல்லி பந்து வீச்சாளர்களை இவர்கள் பதம் பார்த்தனர். சிக்சர்களும், பவுண்டரிகளும் பறந்தன. 99 ரன்னில் கோஹ்லி துரதிருஷ்டமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். 58 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகளும், 4 சிக்சர்களையும் விளாசினார். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 17 பந்தில் 32 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 4 ஓவரில் மட்டும் பெங்களூர் அணி 77 ரன் குவித்தது.
இதையடுத்து 184 ரன் என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. சேவக்கும், ஜெயவர்த்தனேயும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டெல்லி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. ஜெயவர்த்தனே 19, சேவக் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இளம் வீரர் உன்முகுக் சந்த் அதிகபட்சமாக 41 ரன் எடுத்தார். பென் ரோஹர் 32 ரன் எடுத்தார். கடைசி 2 ஓவரில் டெல்லி அணிக்கு 34 ரன் தேவைப்பட்டது.19 ஓவரை ராம்பால் வீசினார். இர்பான் பதான் 2 சிக்சர்களை அடித்து நம்பிக்கை அளித்தார். அந்த ஓவரில் மட்டும் 15 ரன் எடுக்கப்பட்டது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டன. அந்த ஓவரை உனத்கட் வீசினார். முதல் 4 பந்துகளில் பதானும், மோர்னே மோர்க்கலும் சேர்ந்து 10 ரன்களை எடுத்தனர். 5வது பந்தில் மோர்க்கல் கிளீன் போல்டானார். கடைசி பந்தில் உமேஷ் யாதவ் பவுண்டரி அடித்த போதிலும் அதனால் எந்த பலனும் இல்லை. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பெங்களூர் தரப்பில் உனத்கட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. 16 புள்ளிகளுடன் அந்த அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த டெல்லி அணிக்கு இது 10வது தோல்வியாகும்.