கோவை: சிறுவாணி அணையில் செந்நாய்களிடம் சிக்கிய தொழிலாளியை, ஊழியர்கள் உயிருடன் மீட்டனர். கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, கேரளாவில் உள்ளது. அணையின் மொத்த உயரம் 15 மீட்டர். மழை பெய்யாததால், அணை முழுமையாக வறண்டது. அணை பகுதியில் சிறுத்தை, யானை, செந்நாய், மான் உள்பட பல வன விலங்குகள், தண்ணீர் குடிக்க வருகின்றன. இதனால், ஊழியர்கள் பீதியுடன் பணிபுரிந்து வருகின்றனர். தண்ணீர் பம்ப்பிங் செய்யப்படுகிறதா என்பதை பார்க்க, சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தொழிலாளி குமரேசன் (46) குட்டைக்குள் இறங்கினார். அப்போது 20க்கும் மேற்பட்ட செந்நாய்கள், புள்ளிமானை விரட்டி கொண்டு ஓடின.
குட்டையில் இறங்கி ஓடிய மானை செந்நாய்களும் துரத்தின. அங்கிருந்த குமரேசன், பதறியடித்து ஓட முயன்றார். மானை விரட்டிய சில செந்நாய்கள் குமரேசனை சுற்றி வளைத்து கடிக்க பாய்ந்தன. பீதியடைந்த குமரேசன் குட்டைக்குள் குதித்தவாறே, ‘காப்பாற்றுங்கள்‘ என கூச்சலிட்டார். அணை கரையில் ஷெட் அமைத்து தங்கியிருந்த குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்டையுடன் ஓடி வந்தனர். இதை பார்த்த செந்நாய்கள், குமரேசனை விட்டு விட்டு ஓடின. குமரேசன் உயிருடன் மீட்கப்பட்டார். எனினும் அவருக்கு பதற்றம் தணியவில்லை.
சில நாட்கள் முன்பு, அணையின் நீர் தேக்க பகுதியில் புள்ளிமான் ஒன்று வன விலங்குகளால் வேட்டையாடப்பட்டது. ஒரு மரத்தின் மீது சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்ததை ஊழியர்கள் பார்த்துள்ளனர். அணையில் மோட்டார் பொருத்தும் பணி நடந்த போது 2 யானை கூட்டத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு யானை, மற்றொரு யானையை குட்டையில் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.