துடைப்பத்தால் அடி வாங்கிய கங்கனா ரனவத்
மும்பை: என் அம்மா எனக்கு தாலாட்டு பாடியதைவிட, துடைப்பத்தால் அடித்ததுதான் அதிகம் என்றார் கங்கனா ரனவத்.
தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கங¢கனா ரனவத். கேங்ஸ்டர், தனு வெட்ஸ் மனு, கேம் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். ‘பேஷன் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறார். தனது குழந்தை பருவம்பற்றிய பழைய நினைவுகளை பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறியது: என் அம்மா சமஸ்கிருத டீச்சர். பள்ளியில் அவரை பார்த்து மாணவிகள் நடுங்குவார்கள். அவ்வளவு கண்டிப்பானவர். எனக்கும் அவரை பார்த்தால் பயம்தான். ஒருவரின் சிறுவயது நினைவு என்றவுடன் அவரது அம்மா பாட்டு பாடி, சோறு ஊட்டியதுதான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் என் அம்மாவை பற்றி நான் நினைக்கும்போது அவரிடம் துடைப்பத்தால் அடிவாங்கியதுதான் ஞாபகத்தில் இருக்கிறது.
அவர் எனக்கு தாலாட்டி பாடியது எதுவும் என் நினைவில் இல்லை. அவர் இவ்வளவு கடுமையாக நடந்துகொண்டதற்கு காரணம் என்னை நல்ல முறையில் வளர்ப்பதற்காகத்தான். குடும்பத்தை நடத்தி செல்வதற்காக எல்லாவற்றிலும் எனக்கு பயிற்சி அளித்தார். பாத்திரம் துலக்குவது முதல் சமையல் செய்வதுவரை கற்றுக்கொடுத்தார். 16 வயதிலேயே எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதும் அவரது எண்ணம். அதனால் திருமணத்துக்கு பிறகு குடும்பத்தை நடத்துவது எப்படி என்றும் கற்றுத்தந்தார். இப்போது திருமணம் செய்தால், என்னால் குடும்பத்தை சமாளிக்கும்
அளவுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது.