ஊட்டி: கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி ஏரியில் நேற்று அரசு துறைகளுக்கு இடையேயான படகு அலங்கார போட்டி நடந்தது.போட்டிகளை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார். தோட்ட கலை துறை, மகளிர் திட்டம், வழிகாட்டிகள் சங்கம், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், சுற்றுலா துறை, திபெத்திய மக்களின் அலங்கார படகுகள் அணி வகுத்து சென்றன. இதில் மகளிர் திட்டம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட படகில் நீலகிரி வாழ் படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் இடம் பெற்றது. திபெத் மக்கள் பாரம்பரிய ஆடைகளுடன் படகில் நடனமாடி வந்ததும் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
அலங்கார அணிவகுப்பில் மகளிர் திட்ட துறை முதல் இடத்தை தக்க வைத்து கொண்டது. 2ம் இடத்தை திபெத்திய மக்களின் படகும், 3ம் இடத்தை பழங்குடியினர் ஆராய்ச்சி மைய படகும் தட்டி சென்றன.