கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இன்று காலை சந்தைக்கு மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து வண்டியில் இருந்து இறக்கிய போது மிரண்டு போன மாடு முட்டியதில் விவசாயி குடல் சரிந்து பரிதாபமாக இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை அடுத்த தண்டேகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32), விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இதில் 2 மாடுகளை விற்க, மினி டெம்போவில் ஏற்றி கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வார சந்தைக்கு கொண்டு வந்தார். அங்கு ஒரு மாட்டை மினி டெம்போவில் இருந்து இறக்கிவிட்டு, மற்றொரு மாட்டை இறக்க சென்றார். அப்போது மிரண்டு போன மாடு கோவிந்தராஜை கொம்பால் குத்தியது. இதில் குடல் சரிந்து தரையில் சாய்ந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். வளர்த்த மாடு முட்டி விவசாயி பலியானதால் குந்தாரப்பள்ளி வார சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சந்தைக்கு சென்று கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.