சேலத்தில் பயங்கர விபத்து லாரிகள் மோதி தீப்பிடித்தன
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் பூலாம்பட்டி பொறையூரை சேர்ந்தவர் ராமேஸ்வரன் (33). லாரி டிரைவரான இவர், சங்ககிரியில் உள்ள சிமெண்ட் பேக்டரிக்கு மண் லோடு அடித்து வருகிறார். நேற்று இரவு அரியலூரில் இருந்து மண் ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கி வந்தார்.
சீலநாயக்கன்பட்டி பை&பாஸ் சாலையில் குமரகிரி ஏரி தனியார் பள்ளி அருகே வந்தபோது, லாரி பஞ்சரானது. லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு, லாரியின் மேல் பகுதியில் டிரைவர் ராமேஸ்வரன் தூங்கினார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் புதுச்சேரியில் இருந்து மேட்டூருக்கு சல்பியூரிக் அமிலத்தை ஏற்றிக் கொண்டு வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த மண் லாரி மீது மோதியது.
இதில் தீ பற்றி 2 லாரிகளும் எரிந்தன. 2 லாரி டிரைவர்களும் கீழே குதித்து உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், விரைந்து வந்து தீயணைத்தனர்.