வாஷிங்டன்: அமெரிக்காவில் சொகுசு கார் திடீரென தீப்பற்றியதில் மணமகள் உள்பட 5 பெண்கள் உடல் கருகி இறந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்கா உள்பட பல நாடுகளில் திருமணங்கள், பள்ளி, கல்லூரி விழாக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு லிமோசின் கார்களை பயன்படுத்துகின்றனர். இதற்காகவே லிமோசின் கார்களை வாடகைக்கு விடும் கம்பெனிகள் ஏராளமாக உள்ளன. இந்த வகை கார்களில் டிரைவர் பகுதியும் பின்னால் பயணிகள் உட்காரும் பகுதியும் பிரிக்கப்பட்டிருக்கும். லிமோசின் காரில் சத்தமாக பாட்டு போட்டு கொண்டு உள்ளே ஆரவாரத்துடன் விழா கொண்டாடுபவர்கள் செல்கின்றனர்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நீரிஜா போஜாஸ் என்ற இளம்பெண், சமீபத்தில் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகன் ஓட்டலில் காத்திருந்தார். மணமகள் நீரிஜா மற்றும் 8 பெண்கள், லிமோசின் காரில் கடந்த சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். சான் மேட்டோ பாலத்தில் செல்லும் போது திடீரென காருக்குள் புகை எழுந்தது. மூச்சுத் திணறியதால் உள்ளே பெண்கள் கூச்சலிட்டனர்.
அவர்கள் சிகரெட் பிடிக்கதான் அனுமதி கேட்கின்றனர் என்று நினைத்த டிரைவர் நிறுத்தாமல் தொடர்ந்து காரை ஓட்டினார். திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே நிறுத்தினார். உள்ளே புகை மூட்டத்தில் சிக்கிய பெண்களில் 4 பேர் மட்டும் கதவை உடைத்து கீழே குதித்து உயிர் தப்பினர். மணமகள் உள்பட மற்ற 5 பேர் காரில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மணகள் நீரிஜா அடுத்த மாதம் பிலிப்பைன்ஸ் சென்று அங்கு பெற்றோர் ஏற்பாடு செய்திருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். அதற்குள் இந்த பயங்கரம் நடந்து விட்டது.
விபத்தில் சிக்கிய லிமோசின் காரை, இந்திய வம்சாவளியை சேர்ந்த குல்தார் சிங் என்பவரிடம் வாடகைக்கு எடுத்துள்ளனர். இதுகுறித்து குல்தார் கூறுகையில், இந்த விபத்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்றார். ஆனால், விபத்துக்கான காரணத்தை கூறவில்லை. இந்த சம்பவத்தால் ஆடம்பர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தேவையான லிமோசின் கார்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவில் சர்ச்சை எழுந்துள்ளது.