சென்னை: சேவை வரி ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் 50 ஆயிரம் ஓட்டல்கள் இன்று மூடப்பட்டது. குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்கள் 12.36 சதவீத சேவை வரியை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் சேவை வரி அமலுக்கு வந்துள்ளது. உணவகங்கள் சார்பில் ஏற்கனவே மாநில அரசுக்கு வாட் வரி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சேவை வரியை ரத்து செய்ய கோரி, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு முழுவதும் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் இன்று ஏசி வசதியுள்ள மற்றும் ஏசி வசதி இல்லாத 50,000 ஓட்டல்கள் மூடப்பட்டது. சென்னையில் மட்டும் 7 ஆயிரம் ஏசி ஓட்டல்கள் உள்பட 15 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்பட்டது.
ஓட்டல் ஸ்டிரைக்கை தொடர்ந்து, சென்னையில் மாநகராட்சியின் மலிவு விலை உணவகங்களில் கூடுதலாக இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. மலிவு விலை உணவகங்களில் காலை முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.இது குறித்து தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் செயலாளர் ஆர்.சீனிவாசன் கூறுகையில், ‘‘ஓட்டல்களுக்கு மாநில அரசு வாட் வரி விதித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு சேவை வரியை ஓட்டல்களுக்கு விதித்துள்ளது. இதனால், ஓட்டல்களுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக வாடிக்கையாளர் ஒருவர் ரூ.100க்கு சாப்பிட்டால், வரியை சேர்த்து ரூ.140 கட்ட வேண்டிய நிலை ஏற்படும். அதனால், மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்யக்கோரி அகில இந்திய ஓட்டல் கூட்டமைப்பு சார்பில் இன்று நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் ஓட்டல்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ஓட்டல்கள் திறக்கப்படும். அடுத்த கட்டமாக பிரதமரை பார்த்து மனு கொடுக்க இருக்கிறோம்’’ என்றார்.