ஒரே பைக்கில் சென்ற போது லாரி மோதி விபத்து இன்ஜி. மாணவர் உள்பட 4 பேர் பலி
திருப்பதி: ஒரே பைக்கில் சென்ற இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் லாரி மோதி பரிதாபமாக இறந்தனர்.
சித்தூர் மாவட்டம், பாகாலா அருகே உள்ள வச்சேரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் தேஷா (29), ஹேமந்த் (22), பிரசாந்த் (25), சதீஷ் (20). இவர்களில் ஹேமந்த், பொறியியல் கல்லூரி மாணவர். மற்றவர்கள் பனியன் வியாபாரிகள்.
நண்பர்களாக இவர்கள் நேற்று மாலை ஒரே பைக்கில் சித்தூர் வந்து 6 மணியளவில் கிராமத்துக்கு சென்றனர். பி.கொத்தகொட்டா அருகே சென்ற போது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி ராஜேஷ்வர், பூதலப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நித்தியபாபு ஆகியோர் விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து விசாரித்து வருகின்றனர்.