கடற்படை கப்பல் மோதிய சம்பவம் விசைப்படகில் இருந்து காணாமல் போன 4 மீனவர் உடல் மீட்பு; 2 பேர் கதி என்ன?
பனாஜி: கோவா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீது இந்திய கடற்படையை சேர்ந்த கடலோர பாதுகாப்பு படை கப்பல் மோதியதில் விசைப்படகு இரண்டாக பிளந்து கடலில் மூழ்கியது. இதில் இருந்த 22 மீனவர்களில் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். காணாமல் போன 6 பேரில் இதுவரை 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கடலோர பாதுகாப்பு படை உத்தரவிட்டுள்ளது.
கோவா மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் கடந்த 25ம் தேதி கொங்கனி கடல் பகுதியில் விசைப்படகு ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் அந்த வழியாக ரோந்து சென்ற இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் ஒன்று விசைப்படகு மீது பயங்கரமாக மோதி விட்டு சென்றது. இதில் மீன்பிடி படகு இரண்டாக பிளந்து கடலில் மூழ்கியது. அதில் இருந்த 22 மீனவர்களும் கடலில் குதித்தனர். முன்னதாக விபத்து குறித்து அபாய செய்தி அனுப்பினர். இதை அறிந்த மற்றொரு விசைப்படகு விபத்து நடந்த இடத்துக்கு வந்த கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 18 பேரை காப்பாற்றியது. இதற்கிடையில் விபத்து குறித்து இந்திய கடற்படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும் மீட்பு பணியில் இறங்கினர்.
காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 26ம் தேதி ஒரு மீனவரின் உடல் கிடைத்தது. இந்நிலையில் மேலும் 3 மீனவர்களின் உடல் நேற்று மீட்கப்பட்டது. எஞ்சிய 2 மீனவர்களை தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கடற்படை ஹெலிகாப்டர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன. விபத்து நடந்து 4 நாட்கள் ஆகிவிட்டதால் இரண்டு மீனவர்களும் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் தொடர்பாக கோவா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது. கடற்படை சார்பாக ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அவர்களும் விசாரணையை தொடங்கியுள்ளனர். கோவா மாநிலத்துக்கு சொந்தமான கடல் பகுதிக்கு அப்பால் விபத்து ஏற்பட்டிருப்பதால் கடலோர பாதுகாப்பு படை கப்பல் ஊழியர்களை மாநில போலீஸ் கைது செய்ய முடியவில்லை என மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.