அமைச்சர் தொகுதியில் கூட்டுறவு தேர்தலில் கோஷ்டி பூசல் அதிமுக கொடி கம்பம் சாய்ப்பு உறுப்பினர் அட்டைகள் எரிப்பு
கள்ளக்குறிச்சி: அமைச்சர் தொகுதியான சங்கராபுரம் அருகே கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் கோஷ்டி பூசல் காரணமாக அதிமுக கொடி கம்பத்தை வெட்டி சாய்த்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதி ஆலத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மொத்தம் 146 பேர் உள்ளனர். இதில் 11 உறுப்பினர்களை தேர்வு செய்ய கடந்த வாரம் தேர்தல் நடந்தது. ஆலத்தூர் கோவிந்தன் உள்பட 5 பேரும், பிச்சநத்தம் சக்திவேல் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 23ம் தேதி நடந்த ஆலத் தூர் பால் சொசைட்டி தலைவர் பதவிக்கு வேட்பாளர்களாக கோவிந்தன், சக்திவேல் போட்டியிட்டனர். ஆனால் முடிவு அறிவிக்கப்படவில்லை.
இதனால் பிச்சநத்தத்தை சேர்ந்த மேலவை பிரதிநிதி அருள் (இயக்குனர்), ஜெ. பேரவை செயலாளர் வெற்றி உள்பட 10 பேர் அமைச்சர் மோகன் வீட்டுக்கு சென்று முறையிட்டனர். அப்போது, ரூ.1 லட்சம் பணம் வாங்கி கொண்டு கோவிந்தனை தலைவராக அமைச்சர் தேர்ந்தெடுத்ததாக கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். பின்னர் பிச்சநத்தம் அதிமுக நிர்வாகிகள் மாரியம்மன் கோயில் அருகே இருந்த அதிமுக கொடி கம்பத்தை வெட்டி சாய்த்தனர். அதிமுக கரைவேட்டி, உறுப்பினர் அட்டைகளை தீ வைத்து எரித்து, அமைச்சர் தரப்புக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.