ஐஸ்வர்யா பிறந்தநாள் முன்னிட்டு காஞ்சி. அரசு மருத்துவமனைக்கு ஆஸ்துமா, டிபி கண்டறியும் கருவி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில், மறைந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஐஸ்வர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது.
விழாவுக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழுநோயாளிகளுக்கு வேட்டி, சேலை வழங்கினார். ரூ.2.5 லட்சத்தில் மருத்துவமனைக்கு தேவையான ஆஸ்துமா கண்டறியும் கருவி, டிபி கருவி, நீரிழிவு நோய் கருவி, சாப்பாடு கொண்டு செல்லும் டிராலி, சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் மருத்துவமனை துணை இயக்குனர் விஜயகுமார், கண்காணிப்பாளர் சசிகலா, காங்கிரஸ் நிர்வாகிகள் அளவூர் நாகராஜன், முரளி, சுரேஷ், பாஸ்கர், மாடசாமி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.