சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் தொடரின் 38வது லீக் ஆட்டம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. நேற்று விடுமுறை என்பதால் போட்டியை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர். அரங்கமே நிரம்பி வழிந்தது. டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர், சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
மைக் ஹசியும், சகாவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 10 ஓவரில் 100 ரன்னை கடந்தது. மளமளவென ரன்களை குவித்த ஹசி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 95 ரன்னில் அவுட்டானார். 59 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகளும், 2 சிக்சரும் விளாசினார். அவர் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. சகா 39 ரன் எடுத்தார். ரெய்னா அதிரடியாக ஆடி 44 ரன் குவித்தார். டோனி 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன் குவித்தது.
201 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிஸ்லாவும், கம்பீரும் களமிறங்கினர். கம்பீர் ஆட்டம் ஏமாற்றத்தை கொடுத்தது. அவர் 14 ரன்னில் வெளியேறினார். மெக்குலம் 6 ரன்னுக்கும், காலிஸ் 19 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் பிஸ்லா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் 92 ரன்னில் ரன் அவுட்டானார். 61 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி, 2 சிக்சரும் அடித்தார். அவர் வெளியேறிய பின்னர் கொல்கத்தா அணியின் வெற்றி நம்பிக்கை பறிபோனது. 20 ஓவரில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்னை எடுத்தது. இதனால் 14 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 9 ஆட்டங்களில் ஆடிய சென்னை அணி 7 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றது. 9 போட்டிகளில் விளையாடி கொல்கத்தா அணிக்கு இது 6வது தோல்வியாகும். நேற்று மெதுவாக பந்து வீசி நேரம் வீணடிக்கப்பட்டதால் சென்னை அணி கேப்டன் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.