சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை திடீர் விசாரணை நடத்தினர். மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக அமைச்சர்கள் விலகி ராஜினாமா கடிதம் கொடுத்ததற்கு அடுத்த நாளே சிபிஐ விசாரணை நடத்தியிருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘இது அரசியல் பழிவாங்கும் செயல். சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று ஸ்டாலின் கூறினார். சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை திடீரென்று சென்றனர். வீட்டு காவல் பணியில் இருந்தவர்களிடம் தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்றும், சோதனை நடத்த உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது, வீட்டில் ஸ்டாலின் இல்லை. வாக்கிங் சென்றிருந்தார். சிபிஐ அதிகாரிகள் வந்திருக்கும் தகவல் அவருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், திமுக அமைப்பு செயலாளர் டி.கே.கல்யாணசுந்தரமும் திமுக வக்கீல்கள் சிலரும் உடனடியாக ஸ்டாலின் வீட்டுக்கு வந்தனர். சிபிஐ அதிகாரிகள் வந்திருக்கும் தகவல் பரவியதும் திமுக முன்னணி தலைவர்கள், பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் ஸ்டாலின் வீடு முன்பு குவிந்தனர். நடைபயிற்சியை முடித்துக் கொண்டு ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் காலை 8 மணிக்கு வந்தனர். சிறிது நேரத்தில், விசாரணையை முடித்துக் கொண்டு சிபிஐ அதிகாரிகள் காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது, சிபிஐக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
ரெய்டு குறித்து நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், ‘இது அரசியல் பழிவாங்கும் செயலாகும். இதை சட்டப்படி சந்திப்போம்’ என்றார். ஸ்டாலினை சந்தித்துவிட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கூறுகையில், ‘ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினிடம் இருக்கும் வெளி நாட்டு கார் போல தமிழகத்தில் 32 பேரிடம் இருக்கிறது. சிபிஐ ரெய்டு என்பது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்றார். ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜா சங்கரின் வீடு திருமூர்த்தி நகரில் இருக்கிறது. இவரது வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் வைத்திருக்கும் கார் ‘ஹம்மர்’ என்ற வெளிநாட்டு கார். இந்த கார் இறக்குமதி வரி தொடர்பான விசாரணைக்காகவே சிபிஐ அதிகாரிகள் வந்திருந்ததாக கூறப்படுகிறது.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதில் திமுக முன்மொழிந்த திருத்தங்களை மத்திய அரசு பரிசீலனை செய்யாததால், மத்திய அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் அறிவித்தார். திமுக மத்திய அமைச்சர்கள் நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். அதற்கு அடுத்த நாளே, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ ரெய்டு நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.